தேங்கிநின்ற கழிவுநீரில் வெற்றுக்காலில் நடந்தே போகவேண்டும் என பாஜக எம்.எல்.வுக்கு பொதுமக்கள் பணித்ததைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ கழிவுநீரில் நடந்து சென்ற சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.
அடுத்தாண்டு உத்தரபிரதேசத்தில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்பொழுதே தொகுதி மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஹப்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக் என்பவர் அவரது சொந்த தொகுதிக்கு உட்பட்ட தோல்பூர் என்ற கிராமத்திற்கு விசிட் அடித்துள்ளார். அந்த கிராமத்தில் கழிவுநீர் வடிகால் வசதிகள் செய்யப்படாததால் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அங்கு வந்த பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக்கை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். அப்பொழுது அந்த சாலையில் தேங்கி இருந்த கழிவுநீரில் வெற்றுக் காலில் நடக்க வேண்டும் என எம்.எல்.ஏவை பணித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் கூச்சலிட்டதால் எம்.எல்.ஏ கழிவுநீரில் வெற்றுக்காலில் நடந்து சென்றார். அதனை வீடியோவாக பதிவு செய்துகொண்ட அப்பகுதி மக்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அந்தப்பகுதி மக்களின் கஷ்டத்தை தெரிந்துகொள்ளவே நானாக கழிவுநீரில் நடந்தேன் என பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக் தெரிவித்துள்ளார்.