உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. மராட்டியத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்க இருக்கின்றது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618லிருந்து 11,18,043ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423லிருந்து 7,00,087ஆக உயர்ந்துள்ளது. அதைப் போலவே கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,816லிருந்து 27,497ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 40,425 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.