மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய நபர்களில் ஒருவரான ஹேராதாஸ் என்பவரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்துள்ளனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் தனது டுவிட்டரில், “பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள் இதயத்தை கனக்க செய்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டரில், “மணிப்பூரில் மனிதநேயம் மரணித்துவிட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனத்தை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் மணிப்பூர் மக்களுடன் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மாநிலத்தின் சமூக அமைதியை மோசமான வழியில் மோடி அரசு அழித்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி. தனது டுவிட்டரில், “மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். பல்வேறு நாடுகள், மாநிலங்களுக்குச் சென்ற பிரதமர் மோடி, மணிப்பூரை பற்றி சிந்திக்கக்கூட நேரம் ஒதுக்கவில்லை. மணிப்பூரை நினைவுகூர அவரைத் தூண்டியது எது என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மோடி செய்ய வேண்டிய முதல் வேலை, மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனே அமல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், “மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவாக உள்ளது. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்ட சுமையை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது. மணிப்பூரில் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் அனைவரும் வன்முறைக்கு எதிராக ஓர் அணியில் குரல் எழுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான சாகேத் கோகலே, “இரண்டு பெண்கள் பாலியல் துன்புறத்துலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கண்டறிந்திருக்கிறார். அதே சமயம் இந்தச் சம்பவம் நடந்தது மே 4ஆம் தேதி என்றும் அப்போதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவிக்கிறது. இதுபோன்ற அதிமுக்கியமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் போதுகூட மாநில காவல் தலைமை இயக்குநரும், மாநில முதல்வரும் கலந்து பேசிக்கொள்வதில்லையா” என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “மணிப்பூர் வீடியோவைப் பார்த்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதுவரை இதில் சம்பந்தப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்படாததை நினைத்து வெட்கப்படுகிறேன். மத்திய அரசு இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறது. பிரதமர் ஒரு அறிக்கை கூட இது குறித்து வெளியிடவில்லை. மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சரியான நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.