கடந்த ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எம்பி மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் இன்று (08.07.2024) சந்தித்துப் பேசினார். இதனையடுத்து மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு ராகுல் காந்தி சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் தங்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மணிப்பூருக்கு என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இங்கு அமைதி திரும்பக் காங்கிரஸ் கட்சி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் தயாராக உள்ளது. நாங்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசினோம். எங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புகிறோம் என்று ஆளுநரிடம் நாங்கள் தெரிவித்தோம். ஆளுநரிடம் நாங்கள் எங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினோம்.
இங்கு வன்முறைக்குப் பிறகு இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றும், மேலும் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கு நான் விரும்பவில்லை என்று அது எனது நோக்கமல்ல எனத் தெரிவித்தேன். முழு மணிப்பூரும் வேதனையில் உள்ளது. துன்பத்தில் உள்ளது. இந்த துன்பத்திலிருந்து விரைவில் மீள வேண்டும் என்பதை இந்த பயணத்தின் மூலம் நான் புரிந்துகொள்கிறேன். அனைவரும் அமைதி மற்றும் சகோதரத்துவம் பற்றிச் சிந்திக்க வேண்டும். மாறாக வன்முறை மற்றும் வெறுப்பால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் அமைதியைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால் பாசத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சொல்வதைக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவராக உங்களுக்கு உதவ முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அரசும், தேசபக்தர்களாகக் கருதும் ஒவ்வொருவரும் மணிப்பூர் மக்களை அணுகி அரவணைக்க வேண்டும். மணிப்பூருக்கு அமைதியைக் கொண்டு வாருங்கள்.
மணிப்பூரில் பிரச்சனை தொடங்கியதில் இருந்து நான் மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். இங்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றம் அடைந்தேன். நிலைமை இன்னும் எங்கும் சரியாகவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. நான் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைக் கேட்டறிந்தேன். அவர்களின் வலியைக் கேட்டேன். அவர்கள் மீது நம்பிக்கையை வளர்க்க இங்கு வந்தேன். மாநிலம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
நான் உங்கள் சகோதரனாக இங்கு வருகிறேன். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் அதற்கு உதவுங்கள். பிரதமர் இங்கு வருவதும், மணிப்பூர் மக்கள் சொல்வதைக் கேட்பதும், மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம் என்று நான் உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக மணிப்பூர் இந்திய ஒன்றியத்தின் பெருமைக்குரிய மாநிலம். இந்த மாபெரும் சோகத்தில் பிரதமர் மணிப்பூருக்கு வந்திருக்க வேண்டும். மணிப்பூர் மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கும்” எனப் பேசினார்.