சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு தமிழக அரசியல் கடசிகள் தொடர் கண்டனங்களை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்இந்த சம்பவத்தின் பரபரப்பு குறைவதற்குள், மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ மாணவி கல்லூரி விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தேர்வுக்காக கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவரை சக மாணவர் பேச வேண்டும் என்று ஆண்கள் விடுதி வளாகத்திற்கு அழைத்துள்ளார். சக மாணவர் என்பதால், மாணவியும் அங்கே சென்றிருக்கிறார்.
அப்போது மாணவியிடம் அத்துமீறிய சக மாணவர், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து போலீஸில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.