Skip to main content

சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பா.ஜ.க. வழக்கு!

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
BJP filed case against Chennai Police Commissioner

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்திம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் பேரணியை மதுரையில் நடத்த முயன்ற நிலையில் பா.ஜ.க. மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடத்தக் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த ஆண்டின் (2025) முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் (06.01.2025) தொடங்கியது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க., எம்,எல்,ஏ,க்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அ.தி.மு.க, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதே சமயம் சட்டப்பேரவைக்கு வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.  இதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதித்ததாகக் கூறி தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (07.01.2025) நடைபெற்றது. இந்நிலையில்  சென்னை பெருநகர் காவல் ஆணையர் அருணுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் ஏ. மோகன்தாஸ் என்பவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழக ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதித்து விதிமீறலில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பல்கலைக்கழக வழக்கில் போராட அனுமதி மறுத்தும், ஆளுங்கட்சிக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் காவல் ஆணையர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனுவை பதிவுத்துறையில் தாக்கல் செய்து பட்டியலிடுமாறு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்