மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி, எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவிற்கு இடையே நேரடியான போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலையொட்டி மம்தா, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நேற்று (10.03.2021) வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை, 4 - 5 பேர் போலீஸார் அருகில் இல்லாதபோது தன்மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து வலியால் துடித்த அவர், ‘இது ஒரு திட்டமிடப்பட்ட சதி’ என குற்றஞ்சாட்டினார். இதன்பிறகு மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மம்தாவின் கால், கை, கழுத்து பகுதி எலும்புகளில் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் 48 மணிநேரத்திற்கு கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மம்தா பானர்ஜி காலில் கட்டோடு இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தாக்குதல் சம்பவத்திற்கு பாஜகவை குற்றஞ்சாட்டியுள்ள அவரது மருமகனும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, “மே 2ஆம் தேதி வங்க மக்களின் சக்தியைக் காண தயாராக இருங்கள்” எனக் கூறியுள்ளார்.
அதேநேரம் மேற்கு வங்க பாஜக, “மம்தா பானர்ஜியின் தாக்குதல் நாடகத்தை, கண்ணால் பார்த்த ஒரு சாட்சிகூட உறுதிப்படுத்துவதாக தெரியவில்லை. தங்கள் மீது குற்றஞ்சாட்டியதற்காகவும், அவதூறு பரப்பியதற்காகவும் நந்திகிராம் மக்கள் அவர் மீது கோபமாக உள்ளனர். மம்தா, நந்திகிராமில் தனது வெற்றிவாய்ப்பு குறித்து பதற்றத்தில் உள்ளார். தற்போது மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளது.