தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இடவசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது, 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கொண்ட முக்கோண வடிவிலான கட்டிடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த கட்டிடத்தில் மக்களவையில் சுமார் 888 பேர் வரையிலும், மாநிலங்களவையில் சுமார் 300 உறுப்பினர்கள் வரையிலும் அமரும் வகையில் கட்டப்பட்டு உள்ளன. நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் கூட்டு கூட்டத்தின் போது மக்களவையில் 1280 உறுப்பினர்கள் வரை ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற மே 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழை மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதவியில், “ தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே பட்டியலின மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதை மோடி அரசு உறுதி செய்துள்ளது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் அழைக்கப்படவில்லை.
இந்திய உச்சசட்டம் இயற்றும் அமைப்பாக இந்திய நாடாளுமன்றம் உள்ளது. அதில் இந்திய குடியரசுத் தலைவர் பதவி மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரம். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன். புதிய பாராளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும். ஆனால் மோடி அரசு இதனை மதிக்கவே இல்லை. பாஜக - ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவர் அலுவலகம் வெறும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.