Skip to main content

“அதானி ஊழலை மறைக்க என்னை பேசவிடாமல் தடுக்கின்றனர்” - மஹுவா மொய்த்ரா எம்.பி. ஆவேசம்

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Mahua Moitra says They are preventing me from speaking to cover up the Adani scam

 

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து அவர், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனி நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

 

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனி நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பான நாடாளுமன்ற நன்னடத்தைக் குழுவின் அறிக்கையை மக்களவை சபாநாயகரிடம் நேற்று (10.11.2023) அளித்தனர். நன்னடத்தை குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதானி குழுமம் ரூ.1300 கோடி நிலக்கரி ஊழலில் ஈடுபட்டுள்ளது. இதை பற்றி கேள்வி கேட்ட என் மீது லஞ்சப் புகார் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க மக்களவை நெறிமுறை குழு பரிந்துரைத்துள்ளது. அதானி ஊழலை மறைக்க என்னை பேசவிடாமல் பதவியை பறிக்க முயற்சிக்கிறார்கள். மோடியும், அதானியும் தான் அரசை வழிநடத்துகிறார்கள். அவர்கள் பற்றி யாரேனும் கேள்வி கேட்டால் உடனே அவர்களை வெளியேற்றி விடுகிறார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

யூடியூப் மூலம் மோசடி? - புகாருக்கு எதிராகத் திரண்ட மக்கள்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
People gathered against the complaint for Scammed by YouTube on covai

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சக்தி ஆனந்தன் என்பவர், தனியார் எம்.எல்.எம் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு யூடியூப் சேனலும், செயலி ஒன்றும் இயக்கி வந்துள்ளார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் ஈட்டலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், எம்.எல்.எம் நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்தால் அதற்கேற்ப நிறுவனப் பொருள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாகப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். மேலும், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 

இந்த நிலையில், இந்த யூடியூப் சேனலைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு எதிராக பா.ம.க நிர்வாகி ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று (28-01-24) இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களையும், கோவை புறவழிச் சாலையில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கூடுமாறு உரிமையாளர் சக்தி ஆனந்தன் குறுஞ்செய்தி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதன் பேரில், இன்று (29-01-24) அந்த பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அவர்கள், இந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறினர். மேலும் அவர்கள், இந்த நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாகவும், இதன் மூலம் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் அந்த பகுதிக்கு வந்து, நிறுவனத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுப்பினர்களிடம் உறுதி அளித்தார். அந்த உறுதியின் அடிப்படையில், அங்கிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.