எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக சபாநாயகர் மக்களவையை நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29- ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். அதைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை பிப்ரவரி 1- ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நேற்று (01/02/2021) நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று (02/02/2021) மாலை 04.00 மணிக்கு மீண்டும் கூடியது மக்களவை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவையை ஒரு மணி நேரத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். அதைத் தொடர்ந்து மாலை 05.00 மணிக்கு கூடிய மக்களவை, உறுப்பினர்களின் அமளி காரணமாக இரவு 07.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவையை நாளை (03/02/2021) மாலை வரை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே, விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக விவாதங்கள் நடத்த முடியாமல் முடங்கியது.