உத்தரப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவரை, வழக்கறிஞர் ஒருவர் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்கிம்பூர் பகுதியில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி நகர்ப்புற கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைபெறவுள்ளது. சுமார் 12,000 பேர் வாக்களிக்க தகுதியுடைய இந்த தேர்தல் நடக்கும் அதே நாளில், வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்த தேர்தலுக்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பா.ஜ.க மாவட்ட தலைவர் சுனில் சிங் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ யோகேஷ் வர்மா ஆகியோர் கடிதம் எழுதியதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை யோகேஷ் வர்மா தரப்பினர் கிழித்ததாக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அவதேஷ் சிங் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அவதேஷ் சிங்குக்கும், எம்.எல்.ஏ யோகேஷ் வர்மாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் வங்கி முன் மோதிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த, அவதேஷ் சிங், போலீஸ் முன்னிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ யோகேஷ் வர்மாவின் கண்ணத்தில் அறைந்தார். இதில் கோபமடைந்த யோகேஷ் வர்மாவும், அவதேஷ் சிங்கை அடிக்க முற்பட்டார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். ஆனால், அதையும் மீறி வழக்கறிஞர் அவதேஷ் சிங்கின் தரப்பினர், எம்.எல்.ஏ யோகேஷ் வர்மாவை தாக்கினர். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.