மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடினமான முடிவை எடுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இதனால் மக்கள் தொகையை வரையறைபடுத்த அரசு முன்வர வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்று மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்ப்பவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக சட்டீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல், விரைவில் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த பேச்சு நேற்று முதல் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், இதுதொடர்பாக இணைய வாசிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு இன்று டெல்லியில் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் சிங், இந்த விவகாரத்தில் சில கடினமான முடிவை எடுக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் உறுதியாகக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.