கிறிஸ்தவ பள்ளியில் கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பயாஸ் கன்னியாஸ்திரி மடத்தில் பாதிரியார் தாமஸ்- கன்னியாஸ்திரி செபி இடையேயான முறையற்ற உறவை நேரில் பார்த்ததால் 20 வயதான அபயா என்ற கன்னியாஸ்திரி கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1992- ஆம் ஆண்டு மார்ச் 27- ஆம் தேதி நடந்த நிலையில், இது நாட்டையே உலுக்கியது.
அபயா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என பாதிரியாரால் சோடிக்கப்பட்ட, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் இது கொலை எனத் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் சாட்சிகளை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று (22/12/2020) பாதிரியார் தாமஸ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (23/12/2020) குற்றவாளிகளுக்கானத் தண்டனை விவரங்களை சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி, பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூபாய் 5 லட்சம் அபாரதத்தையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 28- ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத் தீர்ப்பால் அபயாவின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.