காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கும் மசோதா, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பான மசோதா, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதன் பிறகு காஷ்மீர் மாநில மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. காஷ்மீர் மாநில தொடர்பான மசோதாக்களுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால், இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்குவதற்கான மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பிறகே நாடாளுமன்றத்தில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிதழில் இன்று வெளியானது.
இதனையடுத்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தொடர்பான மறுசீரமைப்பு சட்டம் அக்டோபர் 31- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. அதன்படி, அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் பிரிகிறது. அதே சமயம் அக்டோபர் மாதம் 31- ஆம் தேதி முதல் ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.