மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் 200 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இதுவரை இந்த சட்டம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் உ.பியில் இதுதொடர்பாக நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பாஜக ஆதரவு நபர்கள் வந்த கார் மோதியதில் நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேசும்போது, " மத்திய அரசு கொண்டு வந்த இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு இறுதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்ந்தால் உ.பி உள்ளிட்ட வரப்போகும் 5 மாநில தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியாது" என்று கூறியுள்ளார்”.