மேற்கு வங்கத்தில் காவல் நிலையம் தீ வைப்பு சம்பவத்திற்கு வெளிமாநிலத்தவருக்குத் தொடர்பு இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியா கஞ்ச் பகுதியில் கடந்த வாரம் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது கலியா கஞ்ச் காவல் நிலையம் எரிக்கப்பட்டுத் தீக்கிரையானது. மேலும் இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அப்பகுதியில் வன்முறைகள் நடைபெற்றது. காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இச்சம்பவம் குறித்து கூறுகையில், "பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறது. கலியா கஞ்ச் காவல் நிலைய தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய அரசின் இந்த சதியை முறியடிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.