கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் 14 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து அளிக்க தலைமை செயலகம் வந்தனர். ஆனால் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் இல்லாததால், சிறிது நேரம் காத்திருப்புக்கு பின் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்த எம்.எல்.ஏக்கள், தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான கடித நகலை ஆளுநருக்கு வழங்கியுள்ளன.
மேலும் ஆளுநரிடம் பேசி வரும் எம்.எல்.ஏக்கள் உடனடியாக எங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன. அதே போல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு, தற்போது பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியை உடனடியாக கலைக்க ஆளுநரிடம் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா செய்யும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கர்நாடக மாநில அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.