![Secular alliance parties struggle against 10 percent reservation for seniors](http://image.nakkheeran.in/cdn/farfuture/f1AdG8ids5rLYJIEd4PPpZbCPCf4XKn3_ASW5mdMyow/1668793996/sites/default/files/inline-images/n2296.jpg)
புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது, தற்போது தேர்வு செய்யப்பட்டு வரும் அரசுப் பணிகள் அனைத்தும் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்ய வேண்டும். மாநிலத்தில் உள்ள எம்.பி.சி., இ.பி.சி., பி.சி.எம் ஆகிய இட ஒதுக்கீடுகளையே வேலைவாய்ப்பில் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான இரா.சிவா எம்.எல்.ஏ தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்ட தி.மு.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காமராஜர் சிலை அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு நேரு வீதி வழியாக தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனர்.
![Secular alliance parties struggle against 10 percent reservation for seniors](http://image.nakkheeran.in/cdn/farfuture/QO3_JMVe2mHIxO9LBuNtLrZ0TlRjeIHu4Y4IwuK30ew/1668794013/sites/default/files/inline-images/n2297.jpg)
அப்போது அவர்களை அம்பலத்தடையார் மடம் வீதி சந்திப்பில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பேரணியில் ஈடுபட்டவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.