பருவமழை பொய்த்ததால் கர்நாடக மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தடுக்க செயற்கை மழை உண்டாக்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மாநில அரசு மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைந்தது இதற்கான முடிவை எடுத்துள்ளனர். இதற்காக 88 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான டெண்டரும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த செயற்கை மழை பொழிய வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இது போல செயற்கை மழை பொழிய வைப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணா தலைமையிலான அரசு ரூ.9 கோடி செலவில் 80 நாட்கள் செயற்கை மழை பெய்வித்தது. பின்னர் கடந்த 2017ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்தபோது ரூ.35 கோடி செலவில் விவசாயத்திற்காக செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த செயற்கை மழை பொழிவு திட்டமிடப்பட்டுள்ளது.
மேகத்தில் வேதி பொருள் தெளிப்பது மூலம் உருவாக்கப்படும் இந்த செயற்கை மழை கர்நாடகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தில் இப்படி செய்யும் நிலையில், தமிழகத்திலும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் தமிழக அரசும் இதுபோன்ற யோசனைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.