ஆந்திரா மாநிலத்தில், காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. இவர் மறைவுக்கு பிறகு, இவரது மகன், ஜெகன் மோகன் ரெட்டி, அரசியலில் குதித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்டு முதல்வராக பதவி வகித்தார்.
இதற்கிடையில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து, அதன் பின்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனை தொடர்ந்து, ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டார். ஒரே மாநிலத்தில், வேறு வேறு கட்சியில் இருந்த சகோதர- சகோதரிக்கு இடையே அரசியல் போக்கு நீடித்தது. மேலும், ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கும் இடையே சொத்து பிரச்சனையும் ஏற்பட்டது.
குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனப் பங்குகளை தங்கள் வசமாக்கி வருவதாக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். அதன்படி, சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு தகராறு தொடர்பாக ஒய்.எஸ்.ஷர்மிளா மற்றும் அவரது விஜயம்மாவுக்கு எதிராக ஜெகன் ரெட்டி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, அரசியலுக்கு வந்தவுடன் தான் குறிவைக்கப்படுவதாகக் கூறி தனது சகோதரரின் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஷர்மிளா எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான, விஜயம்மா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சொத்துக்கள் யாருக்கும் பிரித்தும் தரப்படவில்லை. சொத்துக்கள் அனைத்து கூட்டு குடும்பத்துக்கு சொந்தமானது. ஜெகன் மோகன் ரெட்டியும். ஷர்மிளாவும் இந்த பிரச்சனையை பேசி தீர்வு கான வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டியை சுற்றி இருப்பவர்களான ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் விஜய்சாய் ரெட்டி மற்றும் வி.ஒய்.சுப்பா ரெட்டி ஆகியோர் உண்மைகளை அறிந்திருந்தும் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகின்றனர்’ என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஷர்மிளாவும் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.