காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நடத்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தற்பொழுதும் இந்த நாட்டில் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை தெரிவித்து 45 நாட்கள் ஆகிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை தருமாறு கடந்த 16ஆம் தேதி ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஒற்றுமை யாத்திரையின் போது தம்மை சந்தித்த பெண்கள் யார் யார் என்பது குறித்து தகவல்களை பெற கால அவகாசம் வேண்டும் என ராகுல் காந்தி கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி வீட்டில் மூன்றாவது முறையாக இன்றும் போலீசார் விசாரணை நடத்தியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டின் முன் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இந்நிலையில் காங்கிரசைச் சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் 'நாங்கள் மொத்த தரவுகளையும் எடுத்து சரியான நேரத்தில் அவற்றை அளித்து விடுவோம். அது எங்களுக்கு இங்கு பிரச்சனை இல்லை. ஆனால் சுதந்திரம் பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்று நடந்தது உண்டா? ஒரு அரசியல் யாத்திரையில் இது போன்ற கேள்வி கேட்கப்பட்டது உண்டா?' என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ், ''நடைபயணம் முடிந்து 45 நாட்கள் கழித்து இது போன்ற விசாரணை மேற்கொள்ளும் போலீசார் கடந்த மாதம் ஏன் அதை செய்யவில்லை' என தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் உத்தரவு இல்லாமல் இந்த நடவடிக்கை சாத்தியமில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையிலான உறவு குறித்து ராகுல் காந்தி பேசுவதால் அவரை திட்டமிட்டு பழிவாங்க மத்திய அரசு துடிப்பதாக பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.