நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.
அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.
2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.