குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக கடந்த 6 ஆம் தேதி அசாம் சென்றுள்ளார். நேற்று காசிரங்கா தேசியப் பூங்காவில் யானைகள் திருவிழாவை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (08.04.2023) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து சுகோய் 30 எம்கேஐ என்ற போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். முப்படைகளின் தலைமைத் தளபதியாக விளங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரம்மபுத்திரா மற்றும் தேஜ்பூர் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் பறந்து இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களைப் பார்வையிட்டார். இந்த விமானத்தை 106வது விமானப் படைப் பிரிவின் கமாண்டர் அதிகாரியான குரூப் கேப்டன் நவீன்குமார் இயக்கினார். இந்த பயணத்தைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் செயல்பாடுகள் குறித்தும் குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விமானப் படையின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த பயணத்தை மேற்கொண்டதன் மூலம் சுகோய் 30 எம்கேஐ விமானத்தில் பறந்த மூன்றாவது இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது இந்திய பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இதுபோன்ற பயணத்தை முன்னாள் குடியரசுத் தலைவர்களான அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டில் ஆகியோர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.