இந்தியாவில் நவராத்திரி விழா, தீபாவளி போன்ற அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், தற்போது கரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் நடமாட்டமும், பயணங்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், பண்டிகை காலத்தின்போது இந்தியாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் மூலம் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கான சதித் திட்டத்தைப் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.எஸ் வகுத்துள்ளது.
இதனைக் கண்டுபிடித்துள்ள இந்திய உளவுத்துறைகள், அனைத்து மாநிலங்களையும் உஷாராக இருக்கும்படி கடந்த 18ஆம் தேதி எச்சரித்துள்ளன. டெல்லியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் சதியுடன் ஊடுருவியிருந்த 6 தீவிரவாதிகளைக் கடந்த 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிகுண்டு பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதுவும், ஐ.எஸ்.ஐயின் சதியில் ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாப்பில் இந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அதிநவீன வெடிகுண்டுகள் அடங்கிய டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், அதிபயங்கர கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுவருகின்றன.
தரண் தரண் மாவட்டத்தில் உள்ள பகவான்புரா கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் காரில் வந்த மூன்று பேரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான பயங்கர வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதில் கமல்பிரீத் சிங் மான், குல்வீந்தர் சிங், கன்வார் பால் சிங் என மூவர் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கிவருவதாலும், டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டுவருவதாலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.