
2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் கடந்த மாதம் முதல் நடைபெற்றது. பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்த போட்டிகள் மட்டும் இலங்கை மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்றது. அதன்படி, துபாயில் நேஷனல் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு, மகாராஷ்டிராவில் வசிக்கும் கிதாபுல்லா ஹமிதுல்லா கான் (36) மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர்வாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. கிதாபுல்லா ஹமிதுல்லா கான் (36) கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்பட்ட பிறகு மால்வனில் உள்ள நகராட்சி அதிகாரிகள், அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்று கூறி கிதாபுல்லா ஹமிதுல்லா கானின் கடையை புல்டோசாரால் இடித்துத் தள்ளினர். ஒரு இஸ்லாமியர் நபரின் வீடு மற்றும் இடிப்பு நடவடிக்கை முன்னறிவுப்பு இல்லாமல் எடுக்கப்பட்டதாகவும், புல்டோசர் நடவடிக்கைகள் குறித்த உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களின் மீறும் செயல் எனவும் கிதாபுல்லா ஹமிதுல்லா கான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரா அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.