![CBSE exams postponed - Govt announces](http://image.nakkheeran.in/cdn/farfuture/5i63TMj0296nqj1KXhaPEwkCzA-rWyghX05GE4EnYus/1618389272/sites/default/files/inline-images/g_6.jpg)
இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தினசரி கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று (13.04.2021) ஒரேநாளில் ஒரு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், வருகின்ற மே மாதம், சி.பி.எஸ்.இயில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சி.பி.எஸ்.இ தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்தது. இன்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் சி.பி.எஸ்.இ தேர்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ தேர்வு ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை எந்தவகையில், எப்படி வழங்குவது என சி.பி.எஸ்.இ முடிவு செய்துகொள்ளலாம். மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தகுந்த சூழல் வரும்பொழுது தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.