Skip to main content

துணை முதல்வரை கிண்டல் செய்த காமெடியன்; சூறையாடப்பட்ட நட்சத்திர ஹோட்டல்!

Published on 24/03/2025 | Edited on 24/03/2025

 

 star hotel was looted after comedian Kunal teased Eknath Shinde

மகாராஷ்டிரா மாநிலத்தின் கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸும் இருந்தனர். அதன்பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தேசிய  ஜனநாயக கூட்டணியே வெற்றிபெற்ற நிலையில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல அரசியல் நையாண்டி ‘ஸ்டண்ட் அப்’ காமெடியன்  குணால் கம்ரா தன்னுடைய நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்துள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குணால் கம்ரா தனது காமெடி மூலம் பார்வையாளர்களுக்கு அரசியலைக் கடத்தி பலரையும் ரசிக்க வைத்து வருகிறார். இதனால் அவரது காமெடி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.  இந்த நிலையில் மும்பை கார் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் குணால் கம்ராவின் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவர் துரோகி என்று கூறி காமெடி செய்ததாக கூறப்படுகிறது. இது சிவசேனா கட்சினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

 star hotel was looted after comedian Kunal teased Eknath Shinde

நிகழ்ச்சி நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற சிவசேனா கட்சியினர் ஸ்டுடியோவையும், ஹோட்டலையும் அடித்து தும்சம் செய்தனர். மேலும் அங்குள்ள சேர்கள், மேஜைகளை அடித்து நொறுக்கி சூறையாடிய அவர்கள், குணால் கம்ரா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இருப்பினும் கோவம் குறையாத சிவசேனா கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்திலும், ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் குணால் கம்ரா மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய சிவசேனா எம்.பி.நரேஷ் மஸ்கே, “காமெடியன் குணாலை மற்ற கட்சிகள் இயக்குகின்றனர். ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் படி பிற கட்சிகள் குணால் கம்ராவிற்கு பணத்தை அள்ளி கொடுக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் குணால் கம்ரா புரிந்து கொள்ள வேண்டும், இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும். ஆனால் அவர் எங்குச் சென்றாலும் சிவசேனா தொண்டர்கள் தாங்கள் யார் என்று காட்டுவோம்” என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். 

அதே சமயம் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, காமெடியன் குணால் கம்ராவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,  “அன்புள்ள குணால், நீங்கள் மாநில மக்களின் உணர்வை பிரதிபலித்துள்ளீர்கள். உறுதியாக இருங்கள் எனது இறுதி மூச்சு உள்ளவரை உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

சார்ந்த செய்திகள்