முகத்தில் தேசியக் கொடி போன்று வரைந்து பொற்கோயிலுக்குச் சென்ற இளம் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான பொற்கோயிலுக்குச் சென்ற இளம்பெண் ஒருவர் தனது முகத்தில் மூவர்ண இந்திய தேசியக் கொடி போன்று வரைந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பொற்கோவில் பாதுகாவலர் ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் உள்ளே செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் இது இந்தியா இல்லையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பாதுகாவலர் இது பஞ்சாப் எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த இளம் பெண்ணும் மீண்டும் மீண்டும் இது இந்தியா இல்லையா எனப் பாதுகாவலரிடம் கேட்டதற்குப் பாதுகாவலர் இல்லை என்று தலையசைத்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த இந்த சம்பவத்தை அந்தப் பெண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு இருப்பதைக் கவனித்த பாதுகாவலர் அந்த இளம் பெண்ணிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலானது. இதனைத் தொடர்ந்து பொற்கோயிலை நிர்வகிக்கும் நிர்வாகம் பாதுகாவலரின் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த கொடியில் அசோகச் சக்கரம் இல்லாததால் அது இந்தியக் கொடியாக இல்லாமல் அரசியல் கொடியாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.