கரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சிய இந்தியா 7- ஆவது இடத்திலிருந்து 6- ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது. இத்தாலியில் 2.34 லட்சம் பேருக்கு கரோனா உள்ள நிலையில் இந்தியாவில் 2.36 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (06/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770 லிருந்து 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348- லிருந்து 6,642 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462 லிருந்து 1,14,073 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,15,942 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 80,229 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,849 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் தமிழகத்தில் 28,694, டெல்லியில் 26,334, குஜராத்தில் 19,094, ராஜஸ்தானில்10,084, மத்திய பிரதேசத்தில் 8,996, உத்தரப்பிரதேசத்தில் 9,733, ஆந்திராவில் 4,303, தெலங்கானாவில் 3,290, கர்நாடகாவில் 4,835, கேரளாவில் 1,699, புதுச்சேரியில் 99 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,887 பேருக்கு கரோனா உறுதியானது. அதேபோல் இந்தியாவில் 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இல்லாத அளவுக்கு 294 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.