கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த நபர் ஒருவர் டெபாசிட் தொகையை சில்லறைக் காசுகளாகக் கொட்டியதால் அதை எண்ணும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். யாத்கிர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட விரும்பிய யங்கப்பா என்ற நபர் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டையாகக் கட்டி டெபாசிட் தொகையாகக் கொண்டு சென்றார். அங்கிருந்த அதிகாரிகள் அவர் கொடுத்த நாணயங்களைப் பொறுமையாக எண்ணிப் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் யங்கப்பா கூறுகையில், 'இந்த ஒரு ரூபாய் நாணயங்களை நான் தொகுதியைச் சேர்ந்த மக்களிடமே வசூலித்து தற்பொழுது டெபாசிட் தொகையாகக் கட்டி இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.