பொதுவாகவே வடமாநில ரயில் நிலையங்கள் சுத்தமில்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் எனச் சொல்லப்படுவதுண்டு. அதிலும் நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது உணவுதான். ரயிலில் கொடுக்கப்படும் உணவிலும், தண்ணீரிலும் கூட சுகாதாரம் இல்லை என்கிற புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், லக்னோவில் இருந்து தற்போது வெளியான வீடியோ காட்சி ஒன்று பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கு அருகே உள்ளது ஐஷ்பாக் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருக்கும் நபர் ஒருவர், சுகாதாரமற்ற முறையில் காய்கறிகளை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோவில், பயணிகளுக்கு வழங்க வேண்டிய உணவைத் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அதற்கான காய்கறிகளை சுத்தம் செய்வதற்கு பதிலாக, அந்த நபர் தனது காலால் மிதித்து அசுத்தம் செய்துள்ளார்.
அந்தக் காய்கறிகளை ஒரு பக்கெட்டில் வைத்து, ரயில்வே டிராக் குழாயில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி சில காய்கறிகளை சுத்தம் செய்துள்ளார். அப்போது, திடீரென அந்த காய்கறிகளை தன் காலால் மிதித்தபடி கழுவினார். அப்போது, அந்த நபருக்கு உதவி செய்வதற்காக, மற்றொரு இளைஞரும் அங்கேயே இருந்தார். அந்த நபர் வெறுங்காலுடன் காய்கறிகளை சுத்தம் செய்து கழுவுவதுடன், காய்கறிகள் வைக்கப்பட்டுள்ள பக்கெட்டில் அவரது கால்களைக் கழுவினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள், இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். மேலும், இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ரயில் நிலையத்தில் வழங்கப்படும் வாட்டர் பாட்டில்கள், குடிநீர் குழாயில் பிடிக்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது வெறும் காலில் காய்கறிகள் கழுவப்பட்ட சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.