Skip to main content

ரூ.23 கோடி மதிப்பிலான  வைரம் கொள்ளை; சினிமாவை மிஞ்சிய சம்பவம்? - நடந்தது என்ன?

Published on 06/05/2025 | Edited on 06/05/2025

 

4 arrested for stealing diamonds worth Rs. 23 crore in Chennai

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வைர வியாபாரி சந்திரசேகர்(69).  இவர் வைரக்கல் வியாபாரம் மற்றும் பெரிய அளவில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வைர நகைகளை விற்பதற்காக,  ஏஜெண்டுகளான சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராகுல் (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (44) சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்புராஜ் (46) ஆகியோரை சந்திரசேகர்  தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக ஏஜெண்டுகள் தங்களுடன் லண்டனில் வசித்து வரும் ராஜன் என்பவரையும், அவரது நண்பர் விஜய், உதவியாளர் அருணாசலம் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு அண்ணா நகரில் உள்ள சந்திரசேகர் வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்றுள்ளனர்.  அங்கு வைர வியாபாரி சந்திரசேகர் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்துள்ளனர். பின்னர் அதற்கு 23 கோடி ரூபாய் விலை பேசி உறுதி செய்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

இந்நிலையில் சந்திரசேகரை ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்ட அந்த ஏஜெண்டுகள் நகை வாங்கும் நபர்கள் அதற்கான பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும் அதைச் சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் வைத்து தருவதாகவும் கூறி சந்திரசேகரை வரவழைத்துள்ளனர்.  அதன்படி ஸ்டார் ஹோட்டலுக்கு  தனது நண்பர் சுப்பிரமணியம் (60), தனது வளர்ப்பு மகள் ஜானகி (27), கார் டிரைவர் ஆகாஷ் (27) ஆகியோருடன் வைர வியாபாரி சந்திரசேகர் சென்றுள்ளார்.  அங்கு ஏஜெண்டுகள் கூறிய ரூமுக்கு சந்திரசேகர் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் வைர நகையுடன் சென்றுள்ளனர்.  நீண்ட நேரம் ஆகியும் சந்திரசேகர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது வளர்ப்பு மகள் ஜானகி அந்த ரூமுக்கு சென்று பார்த்தபோது அங்கு சந்திரசேகரையும், நண்பர் சுப்பிரமணியத்தையும் கட்டிலில் தள்ளி படுக்க வைத்து கை, கால்களை கட்டி போட்டுவிட்டு வைர நகையை ஏஜெண்ட் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வளர்ப்பு மகள் ஜானகி ஸ்டார் ஹோட்டல் மேலாளர் உதவியுடன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

4 arrested for stealing diamonds worth Rs. 23 crore in Chennai

போலீஸ் கமிஷனர் அருணுக்கு இந்த தகவல் சென்றதையடுத்து துணை கமிஷ்னர்  குத்தாலிங்கம்,  உதவி கமிஷனர் கௌதமன் மற்றும் போலீசார் ஸ்டார் ஹோட்டலுககு விரைந்து சென்று வைர வியாபாரி சந்திரசேகரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டன. தனிப்படையினர் வைர வியாபாரியின் வளர்ப்பு மகள் ஜானகி, கார் ஓட்டுநர் ஆகாஷ் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் வைர வகைகளுடன் தப்பிச் சென்ற கும்பல் வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய கருப்பு நிற சொகுசு காரில் சென்றது நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. தனிப்படை போலீசார் அந்த காரின் பதிவெண்ணை வைத்து தமிழகம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர். அனைத்து டோல்கேட்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். டோல்கேட்டை தவிர்ப்பதற்காக ஈ.சி.ஆர். சாலை மார்க்கமாகவே தப்பி வந்த கும்பல் திங்கள்கிழமை அதிகாலையில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் வந்து சிக்கியது.  அந்த கருப்பு நிற சொகுசு காரில் டோல்கேட்டை கடந்து செல்வதற்கான பாஸ்டேக் ஒட்டப்படவில்லை.  இதனால் டோல்கேட் கவுண்டரில் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த காரில் வந்தவர்களுக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விழித்துக் கொண்டு ஓடி வந்துள்ளனர். போலீஸை கண்டதும் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். புதியம்புத்தூர்  போலீசார் காரை தடுத்து நிறுத்தினர்.

4 arrested for stealing diamonds worth Rs. 23 crore in Chennai

இந்த தகவல் தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜானுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த எஸ்.பி. ஸ்பெஷல் டீம் போலீசார், காரில் வந்த கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்து பாதுகாப்பு காரணங்களுக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு துருவி துருவி நடத்திய விசாரணையில், சென்னை ஐயப்பன் தாங்கல் கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஜான் லாய்ட் (34),   வளசரவாக்கம் காமாட்சி நகர் திருப்புகழ் தெருவைச் சேர்ந்த விஜய் (24),   திருவேற்காடு  சிவன் கோயில் பகுதியை சேர்ந்த ரத்தீஷ்(28) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த அருண் பாண்டியராஜன் (32) என்பதும், வடபழனி நட்சத்திர ஓட்டலில் வைர வியாபாரியிடமிருந்து  வைரங்களை கடத்திக்கொண்டு தூத்துக்குடி வழியாக தப்பிச்செல்ல இருந்ததும் தெரியவந்தது.

வைர நகைகளுடன் பிடிபட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு தூத்துக்குடி போலீசார் தகவல் அளித்தனர். சென்னை தனிப்படை போலீசார் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து ரூபாய் 23 கோடி மதிப்புள்ள வைரங்களுடன் பிடிபட்ட நான்கு பேரையும் தூத்துக்குடி மாவட்ட போலீசார் ஒப்படைத்தனர். கைதான நான்கு பேரையும்  காரில் ஏற்றி சென்னை போலீஸ் அழைத்துச் சென்றது. கடத்தல் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு காரை தனிப்படையை சேர்ந்த எஸ்.ஐ ஒருவர் சென்னைக்கு ஓட்டி சென்றார். பிடிபட்ட நான்கு பேரிடமும் சென்னை தனிப்படை போலீசார்  வைரக்கல் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்.. யார்.. என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே..... ரூபாய் 23 கோடி வைரத்துடன் பிடிபட்ட நான்கு பேரும் கொள்ளையடித்த வைரத்தை விற்பதற்காக தூத்துக்குடியில் உள்ள பெண் தொழிலதிபர் ஒருவரை சந்திக்க வந்ததாக தகவல்கள் கசிந்தன. இதனால் அந்த பெண் தொழிலதிபர் யார்... கடத்தல் கும்பலுக்கும் தூத்துக்குடி பெண் தொழிலதிபருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தூத்துக்குடி எஸ் பி தலைமையிலான தனிப்படையினர் தனியாக விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

சார்ந்த செய்திகள்