மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு 10 வயது பள்ளி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், ஜாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் கடந்த 4ஆம் தேதி டியூசன் வகுப்புக்கு சென்ற பின் வீடு திரும்பவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பல இடங்களில் சிறுமியை தேடி வந்துள்ளனர். அவர் எங்கும் கிடைக்காத காரணத்தினால், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில், சிறுமியின் சடலம் அங்குள்ள குளத்தில் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோரும், அந்த கிராமத்தினரும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த பகுதியில் இருந்த காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த போலீஸ் வாகனங்களுக்கும் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால், இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையிலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இந்த சம்பவம் குறித்து 19 வயது வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 3 மாதங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.