மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பல்வேறு வழக்குகளில் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து தனது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், தேர்தலுக்குப் பிறகு விசாரணை அமைப்புகள் பா.ஜ.கவை குறி வைக்கும் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இன்னும் 3 மாதங்கள்தான் நீடிக்கும். தற்போது எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைக்கும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள், 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வை குறிவைக்கும். மெட்ரோ ரயில் நிலையங்கள் முதல் கிரிக்கெட் அணி வரை நாடு முழுவதும் காவி மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது.
காவி என்பது தியாகிகளின் வண்ணம். ஆனால் நீங்கள் பாவிகள். காவி நிறத்தில் உடைகளை அறிமுகப்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியை காவி மயமாக்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பயிற்சியில் மட்டும் காவி நிற உடை அணிந்துவிட்டு போட்டியில் அணியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி அகமதாபாத்துக்கு பதிலாக மும்பை அல்லது கொல்கத்தாவில் நடத்தப்பட்டிருந்தால் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால், இவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அகமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தை நடத்தினார்கள். அதனால்தான் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. பாவிகள் எங்கு சென்றாலும், தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள். உலகக் கோப்பையில் பாவிகள் கலந்துகொண்ட ஒரு போட்டியை தவிர மற்ற எல்லாப் போட்டிகளிலும் இந்திய அணியினர் வெற்றி பெற்றனர். நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்துவிட்டது” என்று கூறினார்.