மகாபாரத காலத்தில் நேரலை தொழில்நுட்பமும், ராமாயண காலத்தில் டெஸ்ட் டியூப் பேபி முறையும் இருந்ததாக உத்தரப்பிரதேசம் மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இந்தி இதழியல் தினத்திற்கான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உபி துணை முதல்வர் தினேஷ் சர்மா, மகாபாரத காலத்திலேயே நேரலை தொழில்நுட்பம் இருந்ததாக தெரிவித்தார். அதாவது குருஷேத்திரத்தில் நடந்த போரை அஸ்தினாபுரத்தில் இருந்தபடியே திரிதராஷ்டிரா மன்னனால் பார்க்க முடிந்ததற்கு, நேரலை போன்ற தொழில்நுட்பம்தான் காரணமாக இருந்தது என தெரிவித்தார்.
அதேபோல், ராமாயண காலத்தில் டெஸ்ட் டியூப் பேபி முறை இருந்ததாகவும் அவர் கூறினார். சீதாவை ஜனக மகாராஜா ஒரு பானைக்குள் இருந்துதான் எடுத்தார். ஆண், பெண் கலவி இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கக்கூடிய அதிசயம் என்பது அப்போதே நடந்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் தேப், மகாபாரத காலத்தில் இணைய வசதி இருந்ததாகவும், குறுகிய மனநிலை உள்ள மக்களுக்கு இதெல்லாம் புரியாது என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.