இந்திய விண்வெளி சார்ந்த தொழில்துறையை மேம்படுத்தும் விதமாகப் பிரதமர் மோடி இன்று, இந்திய விண்வெளி சங்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் இது போன்ற தீர்க்கமான அரசு இதற்கு முன் இருந்ததில்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, இந்த நிகழ்வில் பேசியதாவது;
விண்வெளி சீர்திருத்தத்திற்கான எங்களது அணுகுமுறை நான்கு தூண்களை அடித்தளமாகக் கொண்டது. அவை தனியார்த் துறைக்குப் புதுமையான சுதந்திரம், கையாளுபவராக அல்லாமல் செயல்படுத்துபவராக இருக்கும் அரசாங்கம், இளைஞர்களை வருங்காலத்திற்கு தயாராக்குவது, விண்வெளி துறையைச் சாதாரண மனிதனின் முன்னேற்றத்திற்கான ஆதாரமாகக் கருதுதல் ஆகியவை ஆகும். ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்கியது அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
தேவையற்ற துறைகள் தனியாரிடம் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த அரசின் கொள்கை. இந்தியாவில் பார்வை தெளிவாக உள்ளதால், அது பரந்த அளவிலான ஒரு சீர்திருத்தத்தைக் காண்கிறது. விண்வெளித்துறையில் அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.