Skip to main content

ஹிண்டன்பர்க் அறிக்கை; செபி தலைவரை சுற்றிச் சுழலும் சர்ச்சை - ஐ.சி.ஐ.சி.ஐ  விளக்கம்!

Published on 03/09/2024 | Edited on 03/09/2024
ICICI Bank has clarified that it did not pay the SEBI chairman madhabi puri buch

உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து தீங்கு இழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆதாரமற்றது என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என அதானி குழுமம் தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க், அறிக்கையின் முடிவில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அதானி குழுமம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம். இதுகுறித்த ஆவணங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது என தடாலடியாக கூறியது. இது தொடர்பான உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம்,  அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(SEBI) தலைவர் மாதபி புரி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருப்பதாக ஹிண்டன்பர்க் பர்பரப்பு அறிக்கை வெளியிட்டது. மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாலே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டி இருந்தது.  அதானி குழுமம் முறைகேடு விவகாரத்தைச் செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் தலைவர் மீதே ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு புகார் கூறியது இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில்தான், மாதபி புரி புச் செபியின் தலைவராக இருந்த போது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் ஊதியமாக ரூ.16 கோடி பெற்றிருப்பதாகக் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது.  இதற்கு விளக்கமளித்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ நிர்வாகம்,  செபி தலைவராக பணியாற்றி வரும் மாதபி புரி புச் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றதாகவும்,  ஓய்வுகால பலன்களைத் தவிர அவருக்கு ஊதியமோ, இ.எஸ்.ஐ.பி. பலனையோ ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. குழும நிறுவனங்கள் வழங்கவில்லை என்று கூறியுள்ளது. 

சார்ந்த செய்திகள்