புதுச்சேரி மாவட்டம் முத்தியால்பேட்டை பகுதியில் மக்களிடம் தீபாவளி பரிசு தருவதாக செல்போன் நம்பர்கள் வாங்கப்பட்ட நிலையில் அவர்கள் பாஜகவில் இணைக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அறக்கட்டளையிலிருந்து வருகிறோம் என்று சொல்லி சிலர் மொபைல் நம்பர்களை கேட்டதாகவும் பல்வேறு மக்கள் தங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி பரிசு கொடுக்கப்படும் என்றும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் எனவும் சொன்னதால் அந்த பகுதியில் உள்ள பல பேர் தங்களுடைய செல்போன் நபர்களை கொடுத்துள்ளனர்.
ஆனால் திடீரென 'நீங்கள் பாஜகவில் இணைந்து விட்டீர்கள்' என செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், 'சில நேரங்களில் இதுபோல் போன் கால்கள் வரும். நீங்கள் பாஜகவில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்பார்கள். ஆனால் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவில்லை. தீபாவளி கிப்ட் கொடுக்கிறேன் என்று சொல்லி தான் நம்பர் கேட்டார்கள். நார்மலாக நிறைய மெசேஜ்கள் வரும் அதை எல்லாம் ஓபன் பண்ணி பார்ப்பதில்லை. ஆனால் இப்பொழுது பார்க்கும் போது தான் தெரிகிறது. பாஜகவில் சேர்ந்து விட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இந்த பகுதியில் பல வீடுகளில் நம்பர் வாங்கிக் கொண்டு போனார்கள். ஏதோ நலத்திட்டம் செய்யப் போகிறோம் என்ன சொன்னார்களே தவிர, கட்சிக்காரர்கள் என்று சொல்லவில்லை' என தெரிவித்துள்ளனர்.