தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70.
கடந்த 9ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்கு கரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "வணிகம் மற்றும் சமூக சேவையில் எச்.வசந்தகுமார் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எச்.வசந்தகுமாருடன் உரையாற்றுகையில் தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறை அறிந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.