Skip to main content

நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

farmers

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

இதனையடுத்து இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அதேபோல், உத்தரப்பிரதேச அரசும் இந்த வன்முறை குறித்து விசாரிக்க தனி நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவும் அவருடைய ஆதரவாளர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில், ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தையான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் கோரி, 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று (18.10.2021) காலை 10 மணியளவில் இந்த ரயில் மறியல் போராட்டம் தொடங்கியுள்ளது. விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டம் மாலை 4 மணிவரை நீடிக்கவுள்ளது.

 

இதற்கிடையே விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து, ஹரியானா மாநிலம் சோனிபட் ரயில் நிலையத்தில், விரைவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாவட்டம் லக்னோவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. லக்னோவில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது என தெரிவித்துள்ள லக்னோ காவல்துறை, இந்த விதியை மீறுபவர்கள் மீதும், இயல்புநிலைக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.