18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப்பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டமும், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டமும் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
அதே நேரம் ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஜன சேனா 21 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திர மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தனிப்பெரும்பான்மையும் தாண்டி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பாஜக கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு விஜயவாடாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஐந்து ஆண்டு ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தனர். தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை நான் கண்டதில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன். பாஜகவின் ஆலோசனை கூட்டத்தில் இன்று பங்கேற்க இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.