சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவகிரக கோவிலுக்கு சமீபத்தில் சென்றபோது அங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கோவிலில் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து, மெகபூபா முப்தியின் செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையவாசிகள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து மெகபூபா முப்தி கருத்து தெரிவிக்கையில், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணக்கமாக வாழ்கின்றனர். தர்காவிற்கு வந்து இந்துக்கள் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களைச் செய்வது நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.