உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார்ச்சாலை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் நேற்றுமுன்தினம் சாலை போடும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது சாலையின் ஒரு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது கொதிக்கும் தாரை சாலைப் பணியாளர்கள் ஊற்றியுள்ளனர். அதோடு மட்டுமின்றி சாலைபோடும் வாகனம் நாய் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால், அந்த நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. வலியில் நாய் துடித்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பணியாளர்களின் அலட்சியத்தைக் கண்டித்துள்ளனர்.
நாயின் உடலில் பின்பகுதி கால்கள் முழுவதும் நசுங்கிய நிலையில், சாலை ஓரத்தில் தாரால் மூடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. விலங்கு நல ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது ஜே.சி.பி. உதவியுடன் நாயின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு புதைப்பட்டுள்ளது. நாயை விரட்டவோ, அப்புறப்படுத்தவோ செய்யாமல் உயிருடன் தாரைக் கொட்டி கொலை செய்த ஊழியர்கள் மற்றும் சாலைபோடும் பணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.