உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில், கடந்த ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரை நடைபெற்ற கன்வார் யாத்திரையின் போது, அந்த வழிதடங்களில் அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் மகா கும்பமேளா விழாவில், இந்துக்கள் அல்லாதோர் உணவகங்கள் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அகில பாரதீய அகாரா பரிஷத் என்று இந்து அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ரவீந்திர பூரி தெரிவித்துள்ளதாவது, “சமீபகாலமாக, குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பது, உணவில் எச்சில் துப்புவது போன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கும்பமேளாவில் அனைத்து சனாதனிகளும் இந்துக்களாக இருப்பார்கள். அதனால் யாரேனும் பொருட்களை அசுத்தப்படுத்தி உணவளித்தால் பொறுத்துக் கொள்ள முடியாது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகாகும்பத்தில் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். மகாகும்பத்திற்கு யார் வந்தாலும் சோதனை செய்யப்பட வேண்டியது அவசியம். முகமூடி அணிந்து தவறான வழியில் மகா கும்பமேளாவிற்குள் நுழைவதன் மூலம் சனாதன கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் யாரும் மாசுபடுத்தலாம். வரும் பக்தர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். இதனால் அனைத்து புனிதர்களையும் அடையாளம் காண முடியும். இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடலாம்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது, “2025 ஆம் ஆண்டு மகாகும்பத்தின் போது பிரயாக்ராஜின் பாரம்பரிய எல்லைகளில் இறைச்சி மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது. மகாகும்பத்தில் முழு உலகமும் சனாதன இந்திய கலாச்சாரத்தை சந்திக்கும் . சனாதன பாரம்பரியத்தை மதிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது” என்று கூறினார்.