
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்துகிறார் என்று பாஜகவை சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் மீது சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கவும் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வீரர்கள் நடத்தினார்கள். பின் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வீரர்களுடன் கடந்த 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 15 ஆம் தேதிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின் வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். இதனிடையே பிரிஜ் பூஷன் சரண் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தனது சுயநலத்துக்காக மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சாக்ஷி மாலிக்கும், அவரது கணவரும் மல்யுத்த வீரருமான சத்யவர்த் கார்டியன் ஆகியோர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில், “பாஜகவை சேர்ந்த பபிதா போகத்தும் தீரத் ராணாவும் தான் பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கடிதம் வாங்கித் தந்தனர். இப்போது பபிதாவும், தீரத்தும் எங்களுடன் இல்லை. இப்போது அரசுக்கு எதிராகப் போராட வேண்டாம் என்று கூறுகின்றனர். தங்களின் தேவைக்காக அவர்கள் மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். எங்களது போராட்டத்தை வலுவிழக்கச் செய்துவிட்டனர்” என்று பதிவிட்டனர்.
இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள தீரத் ராணா தனது ட்விட்டர் பக்கத்தில், “நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் எங்கள் சகோதரிகள், மகள்களுடன் இருக்கிறோம். அவர்களை மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.