குஜராத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் அதிகளவு சாராயம் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பச்சாவ் பகுதியில், சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, கிழக்கு கட்ச் போலீசார் உடனடியாக தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் போலீசார் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியான போலீசார் அந்தக் காரை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். காரின் பின் தொடர்ந்து சென்ற போலீசார், சினிமா பட பாணியில் ஜேசிங் செய்து காரை பிடித்தனர். அப்போது அந்தக் காரில் இருந்த சாராய கடத்தல்காரர் யுவராஜ் சிங்கை கைது செய்த போலீசார், அவருடன் காரில் நீடா சௌத்ரி என்ற பெண் காவலர் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இவர் கிழக்கு கட்ச் பகுதியின் காந்திதம் சி.ஐ.டி. காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். பின்பு காரில் இருந்த சாராயம் மற்றும் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார் யுவராஜ் சிங் மற்றும் நீடா சௌத்ரி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.