
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமான படைத்தளம் மீது கடந்த 2016ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தநிலையில், நேற்று (21.11.2021) இரவு, பதான்கோட்டில் உள்ள இராணுவ முகாம் கேட்டின் அருகே கையெறி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள், இந்தக் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்றதும், பதான்கோட்டிலும் பதான்கோட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகன சோதனை நடைபெற்றுள்ளது.
மேலும், தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கையெறி குண்டுகளின் பாகங்கள் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கையெறி குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.