வால்வுகள் பொருத்தப்பட்ட N-95 முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், பல்வேறு உலக நாடுகள் இந்த பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்தோ, சிகிச்சை மருந்தோ இதுவரை பொதுவெளியில் வராத நிலையில், சமூக இடைவெளியும், தன்சுகாதாரமுமே இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது நோய்ப் பரவலைத் தடுக்க உதவும் என்பதால், முகக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக பல்வேறு வகையான முகக்கவசங்களை மக்கள் அணிந்து வருகின்றனர். இதில் வால்வுகள் பொருத்தப்பட்ட N-95 முகக்கவசங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த வகையிலான முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் N-95 முகக்கவசங்கள் தவிர்த்து பொதுமக்களால் அதிக அளவில் வால்வுகள் பொருந்திய N-95 முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வால்வு N-95 முகக்கவசங்கள் கரோனா பரவலைத் தடுக்காது. மாறாகத் தீங்கு விளைவுக்கும். எனவே இது போன்ற பொருத்தமற்ற முகக்கவசங்கள் அணிவதைத் தடுக்க மக்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.