ராகுல் காந்தியின் திறமை குறித்து ஒபாமாவே கருத்து கூறியுள்ளபோது, அதுபற்றி நாம் இனி பேசத் தேவை இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமா “எ பிராமிஸ்ட் லேண்ட்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்த விமர்சனம் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை விவரிக்கும் வகையிலான 768 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் வரும் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தில், தான் அதிபராக இருந்தபோது சந்தித்த சர்வதேச தலைவர்கள் குறித்து ஒபாமா எழுதியுள்ளார். அதன்படி, ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் குறித்தும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ராகுல் காந்தி பற்றி இந்த புத்தகத்தில் கூறுகையில், "பதற்றமானவர், அறியப்படாத குணம் கொண்டவர். ஆசிரியரை ஈர்க்க நினைக்கும் மாணவரைப் போல் பாடங்களை நன்றாகப் படித்தாலும், திறமை படைத்தவராக இருந்தாலும், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய நாட்டம் இல்லாதவராகவே இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒபாமாவின் இந்த கருத்து குறித்துப் பேசியுள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "ஒபாமா போன்ற பெரிய நபர் ஒருவரே இப்படி அனைத்தையும் கூறும்போது ராகுல் காந்தியின் புத்திசாலித்தனம் பற்றி விவாதிக்க வேறு எதுவும் இல்லை. இந்தியாவில் தனக்கு கிடைத்த மரியாதை, தற்போது உலகளவிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.