இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தின.
இந்தநிலையில், கரோனா பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கு மட்டுமே தீர்வாகும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசுக்குப் புரியவில்லை. கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி, பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு நியாய் திட்ட பாதுகாப்பு அளித்துவிட்டு முழு ஊரடங்கை அமல்படுத்துவதே" என கூறியுள்ளார்.
நியாய் திட்டம் என்பது ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் வறுமை ஒழிப்பு திட்டமாகும். மேலும் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பதிவில், "இந்திய அரசு நடவடிக்கை எடுக்காதது, பல அப்பாவி மக்களைக் கொல்கிறது" எனவும் தெரிவித்துள்ளார்.